ஞாயிறு, 21 நவம்பர், 2021

என் இனிய தனிமையே!


என் தனிமையை

உன்னிடம் என்னால்

அறிமுகம் செய்ய முடியவில்லை

ஏனோ அந்நியர்களை

அதற்கு அறவே பிடிப்பதில்லை.


நானும் நீயும் சந்திக்கும்

இந்த நொடியில் இங்கில்லா

நம்  தனிமைகள் வேறு எங்கோ

சந்தித்துக் கொள்ளலாம்.


உனக்கு உன் தனிமை 

எனக்கு என் தனிமை

தனிமையின் பெருங்கொடுமை

அதைத் தனியாகவே

அனுபவிக்க வேண்டும் என்பதுதான்.


தனியாகவே நிற்க வேண்டி இருக்கிறது

பெருங்கூட்டத்தின் நடுவிலும்

வீடு திரும்ப அழும் குழந்தையாய்

காலைக் கட்டியபடி என் தனிமை.


அனைத்த விளக்கில் எரியும் இருளாய்

கவ்விச் சூழ்ந்த ஒரு தனிமைதான்

இந்தக் கவிதையையும்

எழுதிக் கொண்டிருக்கிறது.

             -அருண்குமார்

3 கருத்துகள்: